கொரோனா வைரஸ் உடலில் பரவும் விதம்
கொரோனா வைரஸ் உடலில் பரவும் விதம் ...
கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று அண்டார்டிகா தவிர அனைத்து கண்டங்களிலும் பரவிவிட்டது.இந்த வைரஸ் தொற்றால் இதுவரை உலகளவில் 42 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்த வைரஸ் உடலை எப்படி தாக்குகிறது? இதற்கு எப்படி சிகிச்சை அளிக்கப்படுகிறது? என்பதை விளக்குகிறது இந்த கட்டுரை.
நோயாக உருவாகும் காலம்
இது வைரஸ் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கான காலம்.உங்கள் உடலின் செல்களில் நுழையும் வைரஸ்கள், அவற்றை முதலில் ஆக்கிரமித்துக் கொண்டு, தன் கட்டுப்பாட்டில் கொண்டு வரும்.சார்ஸ்-சி.ஓ.வி.-2 என அதிகாரப்பூர்வமாகக் குறிப்பிடப்படும் கொரோனா வைரஸ், சுவாசத்தின் மூலம் (அருகில் யாராவது இருமிய பிறகு) அல்லது வைரஸ் பரவியுள்ள ஒரு பொருளை, இடத்தைத் தொட்டுவிட்டு பிறகு முகத்தைத் தொடும் போது இந்த வைரஸ் உடலில் நுழைகிறது.
தொண்டை அருகே உள்ள செல்களில் அது முதலில் தொற்றிக் கொள்ளும். சுவாசப் பாதை மற்றும் நுரையீரலுக்கு சென்று அவற்றை ``கொரோனா வைரஸ் உற்பத்தி தொழிற்சாலைகளாக'' மாற்றும். அது பெரும் எண்ணிக்கையில் புதிய வைரஸ்களை உருவாக்கி உடலில் செலுத்தி, அதிக செல்களில் தொற்று ஏற்படுத்தும்.
ஆரம்ப கட்டத்தில் நீங்கள் நோயுற மாட்டீர்கள். சிலருக்கு ஒருபோதும் அறிகுறிகள் தோன்றாது.
நோயாக உருவாகும் காலம், அதாவது தொற்று ஏற்பட்டு அதன் நோய் அறிகுறிகள் தோன்றுவதற்கான காலம், ஆளுக்கு ஆள் மாறுபடும். ஆனால் சராசரியாக இது ஐந்து நாட்கள் என்ற அளவில் உள்ளது.
லேசான நோய்
ஏறத்தாழ அனைவருக்கும் இப்படித்தான் இருக்கும்.
கொரானா வைரஸ் தொற்று பரவிய 10 பேரில் எட்டு பேருக்கு கோவிட் - 19 நோய் லேசான பாதிப்பாக அமையும். காய்ச்சலும், இருமலும் தான் இதற்கான முக்கிய அறிகுறிகளாக உள்ளன.
உடல் வலிகள், தொண்டை வறட்சி, தலைவலியும் கூட வரலாம். ஆனால் இவை வந்தாக வேண்டும் என்றும் கிடையாது.
காய்ச்சலும், அசௌகரியமாக உணர்தலும், தொற்று பரவியதற்கு எதிராக உங்கள் நோய் எதிர்ப்பாற்றலின் செயல்பாட்டால் ஏற்படக் கூடியவை. இந்த வைரஸ் ஊடுருவல் கிருமியாக இருக்கும். உடலின் மற்ற செல்கள், ஏதோ தவறு நேர்ந்திருக்கிறது என உணர்ந்து சைட்டோகின்ஸ் என்ற ரசாயனத்தை உற்பத்தி செய்யும்.
இவை தான் நோய் எதிர்ப்பாற்றலாக செயல்படும். ஆனால் உடல் வலி, காய்ச்சலையும் ஏற்படுத்தும்.
கொரோனா வைரஸ் இருமல் ஆரம்பத்தில் வறட்டு இருமலாக இருக்கும் பின்னர் வைரஸ் தொற்று ஏற்படும்போது, செல்களில் எரிச்சல் தோன்றும்.
சிலருக்கு இருமலின் போது கெட்டியான சளி வெளியாகும் - வைரஸால் கொல்லப்பட்ட நுரையீரல் செல்களின் கெட்டியான சளியாக அது இருக்கும்.
படுக்கையில் கிடந்து ஓய்வெடுத்தல், நிறைய பானங்கள் குடித்தல் மற்றும் பாரசிட்டமால் மூலம் இதற்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருத்துவமனையின் விசேஷ சிகிச்சை முறை எதுவும் தேவையில்லை.
இந்த நிலை சுமார் ஒரு வாரத்துக்கு இருக்கும் - இதிலேயே பெரும்பாலானோர் குணமாகிவிடுவர். வைரஸை எதிர்த்து நோய் எதிர்ப்பாற்றல் போராடும் காரணத்தால் இவ்வாறு நடக்கும்.
இருந்தபோதிலும், சிலருக்கு தீவிர கோவிட் -19 நோய் பாதிப்பு ஏற்படும்.
இந்த நிலையில், இந்த நோய் பற்றி நாம் புரிந்து கொள்ளக் கூடிய விஷயங்கள் இவை. மூக்கு ஒழுகுதல் போன்ற தீவிர சளி அறிகுறிகளும் ஏற்படலாம் என்றும் ஆய்வுத் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
தீவிர பாதிப்பு
வைரஸ் பாதிப்புக்கு எதிராக நோய்த் தடுப்பாற்றல் உக்கிரமாக செயல்படும்போது, இது நோயாக உருவாகும்.
உடலின் மற்ற பகுதிகளில் அழற்சியை ஏற்படுத்த இது ரசாயன சமிக்ஞைகளை அனுப்பும். ஆனால் இதை கவனமாக சமநிலைப்படுத்த வேண்டும். அளவுக்கு அதிகமான அழற்சி ஏற்பட்டால் உடல் முழுக்க பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
``நோய்த் தடுப்பாற்றல் எதிர்வினை செயல்பாட்டில் சமநிலையற்ற தன்மையை இந்த வைரஸ் ஏற்படுத்துகிறது. அளவுக்கு அதிகமாக உடல் அழற்சி இருக்கிறது. இதை எப்படி செய்கிறது என்பது நமக்குத் தெரியவில்லை'' என்று லண்டன் கிங்க்ஸ் கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் நத்தாலி மேக்டெர்மோட் கூறியுள்ளார்.
நுரையீரல் அழற்சி, நிமோனியா எனப்படுகிறது.
உங்கள் வாயிலிருந்து, மூச்சுக் குழாய் வழியாகச் சென்று, நுரையீரலின் சிறிய குழல்களில் அதனால் செல்ல முடியும் என்றால், நுண்ணிய காற்று அறைகளில் அதனால் போய் அமர்ந்து கொள்ள முடியும்.
அங்கு தான் ரத்தத்திற்கு ஆக்சிஜன் செல்வதும், கரியமில வாயு நீக்கப்படுவதும் நடக்கிறது. ஆனால், நிமோனியாவில் இந்த அறைகளில் தண்ணீர் கோர்த்துக் கொண்டு, சுவாச இடைவெளி குறைந்து, சுவாசிப்பது சிரமம் ஆகும்.
சிலருக்கு சுவாசிக்க வென்டிலேட்டர் தேவைப்படும்.
சீனாவில் இருந்து கிடைத்துள்ள தகவல்களின்படி பார்த்தால், 14 சதவீதம் பேருக்கு இந்த நிலை வரை பாதிப்பு ஏற்படுவதாகத் தெரிகிறது.
சிக்கலான நிலையில் பாதிப்பு
பாதிக்கப்பட்டவர்களில் 6 சதவீதம் பேருக்கு சிக்கலான நிலையில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகத் தெரிய வந்துள்ளது.
இந்த சூழ்நிலையில் தான் உடல் செயல்பாட்டை இழக்கிறது, இதுவே மரணம் ஏற்படவும் காரணமாக உள்ளது.
நோய்த் தடுப்பாற்றல் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டு, உடல் முழுக்க பாதிப்பை ஏற்படுத்துவது தான் பிரச்சினை.
ரத்த அழுத்தம் அபாயகரமான அளவுக்கு குறையும்போது உடல் உறுப்புகள் செயல்பாடு குறையும் அல்லது முழுமையாக நின்றுவிடும்.
நுரையீரலில் பரவலான அழற்சி ஏற்பட்டு, மூச்சுத் திணறல் ஏற்படும்போது, உயிர்வாழ்வதற்குத் தேவையான ஆக்சிஜனை அளிப்பதை நுரையீரல் நிறுத்துவிடுகிறது. ரத்தத்தை சுத்திகரிக்க முடியாமல் சிறுநீரகங்களை அது தடுக்கக் கூடும். உங்கள் குடல்களும் பாதிக்கப்படலாம்.
``நீங்கள் அதற்கு ஆட்படும் அளவுக்கு பெரிய அளவில் அழற்சியை இந்த வைரஸ் ஏற்படுத்தலாம். அது பல உறுப்புகளை செயல் இழக்கச் செய்யலாம்'' என்று டாக்டர் பரத் பன்கானியா கூறுகிறார்.
வைரஸை நோய்த் தடுப்பாற்றலால் அடக்கியாள முடியாமல் போனால், உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் அது பரவி, இன்னும் அதிகமான சேதாரத்தை ஏற்படுத்தும்.
இந்த நிலையில் உடலின் செயல்பாட்டில் குறுக்கீடு செய்து சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம். ECMO உள்ளிட்ட சிகிச்சைகள் அதில் அடங்கும்.
தடிமனான குழாய்களில் ரத்தத்தை வெளியில் எடுத்து, ஆக்சிஜனேற்றம் செய்து, மீண்டும் உடலில் செலுத்தக் கூடிய செயற்கை நுரையீரல் இது.
ஆனால் உறுப்புகள் உடலை உயிருடன் வைத்துக் கொள்ள முடியாமல் போகும் போது, அது உயிர்ப்பலி ஏற்படுத்தக் கூடும்.
முதலாவது மரணங்கள்
சிறந்த சிகிச்சைகள் அளித்தும் சில நோயாளிகள் எப்படி இறந்தார்கள் என்பதை டாக்டர்கள் விவரித்துள்ளனர். முதல் இரு நோயாளிகள் சீனாவில் வுஹான் மாகாணத்தில் ஜின்யின்டன் மருத்துவமனையில் இறந்தனர் என்று லான்செட் மருத்துவ இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாவது நபர், 61 வயதான ஆண், மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட சமயத்திலேயே தீவிர நிமோனியா பாதிப்புக்கு ஆளாகியிருந்தார்.
அவருக்கு தீவிர மூச்சுத் திணறல் இருந்தது. வென்டிலேட்டர் வைத்த பிறகும், அவருடைய நுரையீரல் செயல் இழந்துவிட்டது, இருதயம் துடிப்பை நிறுத்திக் கொண்டது.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 11 நாட்களில் அவர் இறந்து போனார்.
இரண்டாவது நோயாளி, 69 வயது ஆண், அவருக்கும் தீவிர மூச்சுத் திணறல் பாதிப்பு இருந்தது.
அவருக்கு ECMO சாதனம் பொருத்தப்பட்டிருந்தது. ஆனால் அது போதுமானதாக இல்லை. தீவிர நிமோனியா மற்றும் ரத்த அழுத்த குறைபாட்டால் உடல் உறுப்புகள் செயலிழந்து அவர் இறந்து போனார்.
No comments